நாமும் நமது பிரபஞ்சமும்

பிண்டத்தைப் போலவேதான் பிரபஞ்சமும் விரிவடைகிறது என்பது வேதாத்திரியத் தத்துவம் தரும் மாபெரும் தகவலாகும்.

அறிவும் ஆற்றலுமான இறைவெளியின் தன்னிறுக்கத்தால் இறைத்துகள்கள் உருவாகி, இறைதுகள்களின் தொகுப்பாக விண்கள் உருவாகி, அவ்வாறு உருவான விண்கள் சேர்ந்து, ஆரம்ப காலத்தில் ஒரு தொகுப்பு உருவானது. தொகுப்பில் உள்ள விண்களின் சுழற்சியால் அலைகள் உருவாக, விரிந்து செல்லும் இவ்வலைகள் தொகுப்பை விரிவடையச் செய்கிறது. விரிவடைய ஆரம்பித்த இத்தொகுப்பை “Cosmic Egg”என்கிறது இன்றைய விஞ்ஞானம். இத்தொகுப்பிற்கு முந்தைய நிலையாகிய இறைத்துகள் பற்றியோ, இறைத்துகள்களின் மூலமான பெருவெளியைப் பற்றியோ இன்றைய விஞ்ஞானம் பேசுவதில்லை என்பது இன்றைய விஞ்ஞானத்தின் குறைபாடாகும். இன்றைய பிரபஞ்சவியல் “Cosmic Egg”லிருந்து தான் ஆரம்பிக்கிறது. 

விண்களின் தொகுப்பு விரிவடைய ஒரு தள்ளுவிசை வேண்டுமென்று கூறுகிற இன்றைய விஞ்ஞானம் அந்தத் தள்ளுவிசை எவ்வாறு உருவாகிறது என்று தெரியாமல் முழிக்கிறது. எவ்வாறு உருவாகிறது என்று தெரியாததால் விலக்கு ஆற்றலை Dark Energy என்று கூறுகிறது இன்றைய விஞ்ஞானம். இன்றைய நிலையில், விலக்கு விசையைப்பற்றியும் அதற்கு காரணமான விண்ணின் சுழற்சி, மற்றும் அனைத்துக்கும் மூலமான வெளி பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிற ஒரே விஞ்ஞானி மகரிஷி தான்.

விலக்கு ஆற்றலின் மூலம் பெருவெளியே என்ற மகரிஷியின் கருத்தை ஆதாரமாக வைத்து நாம் எழுதுகிற விஞ்ஞானக் கட்டுரைகள் இன்று பல விஞ்ஞானப்  பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இக்கட்டுரைகள் மூலம் உலகெங்கும் இன்று வேதாத்திரியம் பரவி வருகின்றது. இக்கட்டுரைகள் நியுட்டன், ஐன்ஸ்டைன், ஹபுல், ஃப்ரிட்மேன், ஆலன் கூத் போன்ற பல விஞ்ஞானிகளின் கருத்தை சற்று திருத்தி மேம்படுத்தவும் செய்கின்றன.

பெருவெளியிலிருந்து சதாகாலமும் துகள்கள் உருவாகிக்கொண்டிருப்பதை இன்றைய விஞ்ஞானம் கணக்கில் எடுக்காததால்,  பல சிக்கல்கள் இன்று உருவாகியிருக்கின்றன.  இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாக நாம் வேதாத்திரிய விஞ்ஞானத்தைப் பார்க்க முடிகிறது.  இன்றைய விஞ்ஞானத்தில் உள்ள சிக்கல்கள் மகரிஷிக்கு தெரிந்திருக்க  நியாயமில்லை. ஆனால்,  அவரது பல கருத்துக்கள் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வாக வருவதை நாம் உணர முடிகிறது.

விஞ்ஞானிகளுக்குச் சிக்கல்கள் தெரிகின்றன, ஆனால், தீர்வு தெரியவில்லை. மகரிஷிக்கு விஞ்ஞான சிக்கல்கள் தெரியவில்லை. ஆனால், தீர்வு தெரிகிறது. விஞ்ஞானச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பது மகரிஷியின் நோக்கம் அல்ல. அவரது நோக்கம் உள்ளதை உள்ளபடி உணர்தல். உணர்ந்ததை அவர் எடுத்துரைக்கும் போது சிக்கல்கள் தானாக மறைகின்றன. இன்றைக்கு வேண்டியது, மகரிஷியின் கருத்துக்களையும் விஞ்ஞான சிக்கல்களையும் இணைக்கும் மெய்ஞான விஞ்ஞானிகளே. அப்படியொரு மெய்ஞ்ஞான விஞ்ஞானியாகத்தான் வாழ்ந்தார் ஸ்டீபன் ஹாக்கிங்.  கணிதத்தால் கடவுளைத் தொட்டார் ஸ்டீபன். ஆனால், தான் தொட்டது கடவுளே என்ற கருத்தை அவர் உணராமலே போய்விட்டார்.

ஆதியில் எல்லையற்ற அளப்பரிய ஓர் ஆற்றல் களம் உண்டு. அது, தானே எழுச்சி பெற்று இப்பிரபஞ்சமாக மாறியிருக்கிறது என்பதை அவரது கணிதம் உறுதிப்படுத்தியது. அந்த ஆற்றல் களம் தான் கடவுள் என்ற ஒரு வரியைக் கூடவே அவர் எழுதியிருந்தால், கடவுளைக் கணிதத்திற்குள் கொண்டு வந்த ஒரு மாபெரும் ஞானி என்று அவரை உலகமே பாராட்டியிருக்கும்.  மாறாக, கடவுள் என்பது நம்மைப்போல ஒரு மனிதர் என்று அவர் ஆழ்மனதில் நினைத்திருந்ததால், தனது கணிதம் தொட்ட ஆற்றல் கலம்தான் கடவுள் என்று அவரால் கூற இயலவில்லை. மாறாக, கடவுள் அவசியமில்லை என்று அவர் எழுதியதால், கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாத்திகவாதியாக அவரை இவ்வுலகம் பார்த்தது. பல பழிச்சொற்களுக்கும் அவர் ஆளானார்.  கணிதம் தொட்ட கடவுளைக் கருத்தால் உணர அவரால் இயலவில்லை. ஸ்டீபன் ஹாக்கிங்ஸிலிருந்து  முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வருகிறார் வேதாத்திரி மகரிஷி.  மதங்கள் போதிக்கின்ற கடவுள் அல்ல உண்மையான கடவுள், அனைத்துக்கும் மூலமாக இருக்கிற பெருவெளியே கடவுள் என்று ஒரு சத்தியத்தை நமக்கு உணர்த்தினார் மகரிஷி.

பெருவெளியில் உருவான துகள்களின் கூட்டு நமது உடலாகவும் வெளியில் எழும் அலை  நமது மனமாகவும் வருகிறது. எனவே, நாம் பெருவெளியின் ஓர் எழுச்சி பெற்ற ஒரு சின்னஞ்சிறு பகுதியே. பெருவெளியே கடவுள் என்றால் நாம் கடவுளின் எழுச்சி பெற்ற நிலைகள்தானே.  நாமும் நமது கடவுளும் என்று பிரித்துப் பார்ப்பதை விட கடவுளே நாமாக எழுச்சி பெற்றிருக்கிறதென்பதே உண்மை.  நான், கடவுள் என்ற முழுமையின் எழுச்சி பெற்ற ஒரு பின்னம்.  நான் ஒரு முழுமையின் பின்னம் என உணர்வது ஞானம்; உணர்ந்த நிலையில் அனைத்து பின்னங்களுடன் அன்பு பாராட்டுவது பக்தி; பின்னங்களின் துயரங்களைப் போக்க முயலும் எனது செயல்கள் அனைத்தும் கர்மயோகம்.

Scroll to Top